உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடி தணிந்தபாடில்லை. மலேசியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், நாடு தழுவிய
முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மலேசியா மட்டுமல்லாமல் தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கொரோனா பரவல் அதிகரிப்பால் திணறி வருகின்றன. அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மலேசியாதான்.
மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,800. இதில் 40 விழுக்காட்டினர் கடந்த மே மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
மலேசியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. அண்மையில் வந்த ரமலான் பண்டிகையின்போது கட்டுப்பாடுகள் சற்று சறுக்கியதாலும், உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியதாலும் கொரோனா பாதிப்பு எகிறியது.
இந்நிலையில், மலேசியாவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதில் மருந்துக் கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள் ஆகிய அத்தியாவசிய தொழில்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.