சீனாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவியுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பறவைகளுக்கு மத்தியில் பரவி வந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் (H10N3) தற்போது மனிதர்களுக்கு முதல்முறையாக பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் கிழக்கு ஜியாங்ஷு மாகாணத்தில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஷெஞ்சியாங் நகரத்தை சேர்ந்த 41 வயது நோயாளிக்கு பறவைக் காய்ச்சல் தொற்று பாதித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பறவைக் காய்ச்சல் வைரஸ்கள் அவ்வப்போது மனிதர்களுக்கு பரவி வருவதாகவும், இதனால் ஆபத்து இல்லை எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பறவைக் காய்ச்சல் வைரஸால் கொள்ளை நோயாக மாற முடியாது எனவும் சீன சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு தொற்று இருப்பது மே 28ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதற்கு முன் H10N3 பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவியதாக உலகில் எங்குமே தகவல் வரவில்லை. முதல்முறையாக சீனாவில் பரவியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வைரஸ் அதி வேகத்தில் பரவக்கூடிய வைரஸ் இல்லை. மேலும், பறவைகள் மத்தியிலேயே பாதிப்பு குறைவானதுதான். எனவே, இந்த வைரஸ் பெருமளவில் பரவ வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.