ஐபிஎல் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில், எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதற்கான வேலைகளை பிசிசிஐ தீவிரப்படுத்தியுள்ளது. பொருளாளர் அருண் தோமல், ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் போன்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று தொடரை நடத்துவது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 1ஆம் தேதி (இன்று) ஐசிசி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கங்குலி ஜெய் ஷா போன்றவர்கள் பங்கேற்கவுள்ளனர். இக்கூட்டம் முடிந்த அடுத்த நாளே இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று ஐபிஎல் பணிகளை துரிதப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பிசிசிஐ உறுதியுடன் இருக்கிறது. தற்போது சில நிர்வாகிகள் அமீரகம் சென்றுள்ளனர். நாளை கங்குலி, ஜெய் ஷா போன்றவர்களும் அங்குச் செல்வார்கள். இதன்மூலம் நீங்களே தெரிந்துகொள்ளலாம், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதை” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முடிவுகள் எப்படி வந்தாலும் அதனை நாங்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம். சில வெளிநாட்டு வீரர்கள் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் பிரச்சினை இல்லை. இதனால் ஐபிஎல் தடைப்படாது. மாற்று வீரர்களை வைத்து போட்டிகள் நடத்தப்படும். வெளிநாட்டு வீரர்கள் ஒருவர் கூட வரவில்லை என்றாலும் தொடர் நிச்சயம் நடைபெறும்” என உறுதியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் இவரின் பேச்சு குறித்துப் பேசியுள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், “முற்றிலும் உள்நாட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்றால் அதற்குப்பெயர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர். தயவுசெய்து வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்து வருகின்றனர்.