அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டுமானம் தடையின்றி தொடர்வதாக ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதுவரை இங்கு 2.81 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.32 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 18.90 லட்சம், பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அரசு உத்தரவுப்படி ஒரே இடத்தில் பலர் கூடுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பல கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டுப் பல தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
அயோத்தி நகரில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ராமர் கோயிலை கட்டும் பணியை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளை அளித்துள்ள தகவலில், “ராமர் கோயில் கட்டுமானப் பணி தங்கு தடையின்றி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை சுமார் 1,20,000 கன மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன.
தற்போது கோயிலின் அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்குப் பணி புரியும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.