குடும்பத்தாருக்கு தெரியாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்த டப்பிங் கலைஞர் ரூபி பாபுவும், அவரின் காதலர் சுனிலும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் செர்தலா பகுதியை சேர்ந்தவர் ரூபி பாபு. 35 வயதாகும் அவர் ஒரு டப்பிங் கலைஞர். அவர் வந்சியூரை சேர்ந்த சுனில்(45) என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர்.
பங்கப்பாரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள். இந்நிலையில் அந்த வீட்டில் தரை தளத்தில் இருக்கும் அறையில் ரூபியும், முதல் மாடியில் சுனிலும் தூக்கில் பிணமாகத் தொங்கியது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
ரூபி பாபுவும், சுனிலும் கடந்த ஓராண்டு காலமாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்திருக்கிறார்கள். அண்மையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ரூபி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சுனில் தன் நண்பருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
மேலும் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார் சுனில். அந்த நண்பர் எங்களுக்கு தகவல் அளித்தார். அதன் பிறகே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம்.
அங்கு சென்றால் படுக்கையறையில் ரூபி பிணமாகத் தொங்கினார். மாடியில் இருந்த படுக்கையறையில் சுனில் பிணமாகத் தொங்கினார். அவர்களின் உறவு குறித்து இரு வீட்டாருக்கும் தெரியாது.
ரூபி, சுனில் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு ரூபி, சுனிலின் உடல்கள் அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. காதலர்கள் இப்படி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.