இஸ்ரேலிய வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் எனும் சிறப்பைப் பெற்ற பெஞ்சமின் நெதன்யாகு, அதிகாரத்தின் மீதான தனது பிடிக்கு மிக சக்திவாய்ந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.
இஸ்ரேலின் பிரபல தொழிலதிபரும் முக்கிய அரசியல் தலைவருமான நாஃப்தாலி பென்னட்,பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்ற தனது கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து ஒரு மாற்று அரசாங்கத்தை கட்டியெழுப்ப முயற்சித்து வருவதை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை ஒரு முறையான கூட்டணி உடன்படிக்கைக்கு வழிவகுத்தால், அது பரவலான சித்தாந்தங்களைக் கொண்ட ஒப்பீட்டளவில் எட்டு சிறிய கட்சிகளுக்கு இடையிலான ஒரு சங்கடமான கூட்டணியாக இருக்கும்.
பிரதமர் பதவி இரண்டு சாத்தியமில்லாத கூட்டாளர்களிடையே மாறி மாறி இருக்கும் சூழல் உருவாகும். ஒரு இறையாண்மை கொண்ட பாலஸ்தீனிய அரசின் கருத்தை நிராகரித்து மத உரிமையை வென்ற முன்னாள் குடியேற்றத் தலைவரான பென்னட் மற்றும் மதச்சார்பற்ற மையவாதிகளின் குரலாகக் கருதப்படும் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரான யெய்ர் லாப்பிட் என எதிரெதிர் கொள்கைகளை உடையவர்கள் எப்படி இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை என்றாலும், பெஞ்சமின் நெதன்யாகுவை வெளியேற்றுவதில் இருவருமே தீவிரமாக உள்ளதால் சமரசம் செய்துகொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது.
“எனது நண்பர் யெய்ர் லாப்பிட் உடன் சேர்ந்து ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க எனது முழு சக்தியுடனும் செயல்படுவேன்” என்று பென்னட் நேற்று இரவு ஒரு உரையில் கூறினார்.
அவர் மேலும், “நாங்கள் வெற்றி பெற்றால், நாங்கள் இஸ்ரேல் அரசுக்கு மிகப்பெரிய ஒன்றைச் செய்வோம்.” எனக் கூறினார்.
காசாவில் பாலஸ்தீனியர்களுடனான ஆயுத மோதலுக்குப் பின்னர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியில் இருப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தியதாக எதிர்முகாமில் பலர் நினைப்பதால், கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது..