கார்த்தி, சூர்யா படங்களில் நடித்த பிரணிதா சுபாஷ், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அருள்நிதியின் உதயன் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரணிதா சுபாஷ். கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். பூஜ்- தி பிரைட் ஆஃப் இந்தியா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார் பிரணிதா. முதல் படமே ரிலீஸாகாத நிலையில் ஹங்காமா 2 இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும், பிரணிதாவுக்கும் நேற்று திருமணம் நடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக யாருக்கும் சொல்லவில்லையாம். இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் தான் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரணிதா, நிதினுக்கு நெருக்கமான ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் தான் அதுவே தெரிய வந்தது. பிரணிதாவுக்கும், நிதினுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று திருமணம் நடந்திருக்கிறது.
பிரணிதா, நிதினுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது,
திருமணத்தை பிரமாண்டமாக நடத்தவே அவர்கள் இருவரும் விரும்பினார்கள். ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் அவர்களின் திட்டம் எல்லாம் வீணாகிவிட்டது. இதையடுத்தே எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள் என்றார்கள்.
திருமண புகைப்படங்கள் வெளியாகியிருக்கும் போதிலும் அது குறித்து பிரணிதாவோ, நிதினோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. பிரணிதா எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச மாட்டார். படங்கள் பற்றி மட்டுமே பேசுவார். அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.