மகேந்திரசிங் தோனியை இரண்டே வார்த்தைகளில் புகழ்ந்த விராட் கோலியின் இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.மகேந்திரசிங் தோனி குறித்து இரண்டே வார்த்தைகளில் பதிலளியுங்கள் என ரசிகர்கள் ஒருவர் விராட் கோலியிடம் கேட்டுக்கொண்ட நிலையில், அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் தனிமை முகாமில் இருக்கிறார்கள்.
இந்திய அணி வீரர்கள் பலர் தனிமை முகாமில் எப்படி நேரம் போகிறது என்பதைப் புகைப்படம் எடுத்து சமீக ஊடகங்களில் பதிவேற்றி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார்.
அப்போது ரசிகர் ஒருவர் கோலியிடம், மகேந்திரசிங் தோனி குறித்து இரண்டே வார்த்தைகளில் பதிலளியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த கோலி, “நம்பிக்கை, மரியாதை” எனக் கூறினார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வினுடன் கலந்துரையாடல் நடத்திய கோலி, நான் கேப்டனாக வருவதற்கு தோனிதான் முக்கிய காரணம் எனத் தெரிவித்திருந்தார்.
“இந்திய அணிக்கு அறிமுகமான பிறகு XI அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்காகக் கடினமாக உழைத்தேன். அப்போது கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனியிடம் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பேன். அவர் நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்று நான் சிறந்த கேப்டனாக இருப்பதற்கு தோனிதான் முக்கிய காரணம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.