நைஜீரியாவில் பள்ளிக்கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டின் நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய கல்வி அளிக்கப்படும் இந்த பள்ளி கூடத்திற்கு நேற்று திடீரென மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். கைகளில் ஆயுதமேந்திய அவர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், மாணவர்கள் அச்சத்தில் உறைந்து போயிருந்தனர். இதன்பின்னர் மர்ம நபர்கள், அங்கிருந்த ஏறக்குறைய 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து, நைஜர் நகர போலீஸ் அதிகாரி வாசியு கூறும்பொழுது, பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் கடத்தப்பட்டனர் என உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றிய போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மர்ம நபர்கள் பள்ளி கூடத்தில் புகுந்து மாணவர்களை கடத்தி செல்வதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அரசு விடுவித்து கொண்டு வருவதும் அதிகரித்து உள்ளது.