ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனை இதுதான் என்று குற்றப்பத்திரிகை ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது
இந்தியாவின் பிரதமராக பாஜகவின் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அதன் பின்னர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அவர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவர் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதன் இரண்டாம் ஆண்டு விழாவை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆட்சியையும் சேர்த்தால் பிரதமர் மோடி பதவியேற்று இன்றுடன் ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த ஏழு சாதனைகள் என்று குற்றப்பத்திரிகை ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, விவசாயிகளை வெறுக்கும் மோடி அரசு, கொரோனாவை தடுக்கத் தவறிய அரசு, எல்லையில் சீன ஊருடுவல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி மைனஸில் செல்வது உள்ளிட்டவைகள்தான் மோடி அரசின் ஏழு ஆண்டு சாதனை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
2014ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை விட்டு செல்லும்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி 8.1 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது மைனஸ் 7.5 சதவீதமாக உள்ளது. இது 2020-21 ஆம் ஆண்டில் மைனஸ் 8 சதவீதத்திற்கு அருகில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் மோடி ஆட்சிக்கு வந்தார். அப்படிப்பார்த்தால் ஏழு ஆண்டுகளில் 14 கோடி வேலைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் வேலையில்லாதோர் விகிதம் கடந்த 45 ஆண்டுகளிலேயே அதிகம் என்ற அளவுக்கு உள்ளது.
பெட்ரோல், டீசல், சமையலுக்கு உதவும் பருப்பு வகைகளின் விலை அதிகரித்துக் கொண்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை கார்பரேட் மயமாக்குகிறது மத்திய
பாஜக அரசு. கிட்டத்தட்ட 3.20 கோடி மக்கள் ஏழ்மையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் காங்கிரஸ் அரசு சுமத்தியுள்ளது.