அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். இவர் கடந்த 5 வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்தார்.
இருவரும் சேர்ந்து பிசினஸ் ஆரம்பிப்போம் என்று நடிகை சாந்தினியிடம் பழக தொடங்கிய மணிகண்டன் பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த 5 ஆண்டுகளாக முதல் மனைவிக்கு தெரியாமல் குடும்பம் நடந்து வந்ததாக சாந்தினியின் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மணிகண்டனால் கர்ப்பமாகி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதுடன், தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் மணிகண்டன் மிரட்டுவதாக நடிகை சாந்தினி புகார் கூறினார்.
இந்த புகாரை குறித்து பதிலளித்த மணிகண்டன், தன்னிடம் ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்துடன், நடிகை பொய்ப் புகார் அளித்ததாக கூறினார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள சாந்தினி தேவா, தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.