நைஜீரியாவில் அமைந்துள்ள நைஜர் ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் குறைந்தது 60 பேர் இறந்துவிட்டதாகவும், காணாமல் போன 83 பயணிகளும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கெப்பி மாநிலத்தில் நைஜீரியாவின் மிகப்பெரிய ஆற்றின் குறுக்கே பயணிக்கும் போது பல குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 160’க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட படகு ஒரு பாறையில் மோதி உடைந்த பின்னர் மூழ்கியது எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவசரகால தொழிலாளர்கள் மீட்பு முயற்சிகளைத் தொடர்ந்தனர். உடல்கள் ஆற்றின் கரைக்கு அருகிலுள்ள அணியின் படகில் இருந்து காத்திருக்கும் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது என கெப்பி மாநில அவசரநிலை மேலாண்மை அமைப்பின் தலைவர் சானி டோடோடோ தெரிவித்தார்.
இன்னும் காணாமல் போன 83 பயணிகள் உயிருடன் இருப்பது சந்தேகம் தான் என்று அவர் அஞ்சுகிறார். விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே இருபத்தி இரண்டு பயணிகள் மீட்கப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் வேறு எந்த நபரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இறந்தவர்களில் ஒரு வயதுக்கு குறைவான குழந்தையும் இருந்தது.
தற்போது ஆற்றில் அதிக தண்ணீர் செல்வதால் மீட்பு முயற்சிகள் மெதுவாக உள்ளன. இதனால் படகுகளில் உள்ள டைவர்ஸ் மற்றும் மீட்பு தொழிலாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதே ஆபத்தானது என்று டோடோடோ கூறினார். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்திலிருந்து கெப்பி மாநிலத்தில் உள்ள வாரா நகரத்திற்கு பயணித்தபோது படகு உடைந்ததற்கு காரணம் பாறையில் மோதியது தான் எனக் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
நைஜீரியாவில், குறிப்பாக நைஜர் ஆற்றில் படகு விபத்துக்கள் வழக்கமாக நடக்கும் ஒன்றாகவே உள்ளது. அதிக சுமை, பல படகுகளின் மோசமான நிலை மற்றும் கப்பல்கள் அடிக்கடி நீருக்கடியில் உள்ள குப்பைகளில் மோதுவதால் விபத்து நடக்கும்.