கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹான்ஸ் க்ளூஜ் கூறும்போது, “ கொரோனா தொற்று முடிந்துவிட்டதாக எண்ணி விடாதீர்கள். கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஐரோப்பாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைவாக உள்ளது.
கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.ஐரோப்பாவில் இதுவரை 19% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் இதுவரை 10 % மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.