தற்போது கொரோனா ஆய்வகத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வீட்டிலேயே சோதித்து 15 நிமிடங்களில் முடிவு அளிக்கும் கருவிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் பரிசோதனைக் கூடங்கள் நிரம்பி வழிகின்றன. இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதால், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று எளிதாகப் பரவக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதிலும் தாமதம் நிலவுகிறது.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக வீட்டிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கிட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரேப்பிட் ஆன்டிஜன் சோதனை (RAT) கருவி க்கு மத்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில் சில கட்டுப்பாடுகளையும் ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களும், நோய் தொற்றுக்குள்ளான நபர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இந்த கிட்-ஐ வாங்கிப் பயன்படுத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து ஹிராநந்தினி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சஹீல் அகமது, ”இந்தக் கிட்டில் பாசிடிவ் வந்தால், கொரோனா தொற்றுள்ளது நிச்சயம். வேறொரு பரிசோதனை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்ற செயல்முறைகள், கிட் பாக்சில் இடம் பெற்றிருக்கும். மூக்கில் இருந்து முறையாக சாம்பிள் எடுத்த பிறகு, டெஸ்ட் கிட்டில் வைத்துப் பரிசோதிக்க வேண்டும். முடிவுகள் 15 நிமிடத்தில் காட்டப்படும். உங்களின் முடிவு பாசிடிவ் என வந்தால், மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்த்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அத்துடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அறிகுறி இருந்தும் சோதனை நெகடிவ் என வந்தால், RT PCR சோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
கருவியில் சி மற்றும் டி என இரு கோடுகள் இருக்கும். நாம் வைத்த சாம்பிள் 15 நிமிட சோதனைக்குப் பிறகு சி மற்றும் டி என இரு இடங்களிலும் கோடுகள் தெரிந்தால், கொரோனா பாசிடிவ். எனவும் சி பாக்சில் மட்டும் கோடு தெரிந்தால், உங்களுக்கு கொரோனா சோதனை நெகடிவ் எனவும் தெரிந்துக் கொள்ளலாம்
ஒருவேளை. இரு இடங்களிலும் கோடு தெரியவில்லை என்றால், நீங்கள் வாங்கிய கருவி உபயோகமில்லாதது என அறிந்து, மற்றொரு கருவியை வாங்கி பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு நீங்களே வீட்டில் சோதனை செய்து கொள்வதால் மூக்கு துவார பகுதிகளில் கூச்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே சரியாக வைத்து சாம்பிள் எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் முடிவுகள் தவறாக கிடைக்க நேரிடும். மேலும் பாசிடிவ் என வந்தால், சோதனை எடுக்க உதயவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.