பிரேசில் நாட்டுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை என போப் ஆண்டவர் கருத்து தெரிவித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரேசில் நாடு கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 66,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16.34 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 4.56 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். உலக அளவில் உயிரிழப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது சுமார் 11 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இதையொட்டி பிரேசில் நாட்டு பாதிரியார் ஒருவர் கத்தோலிக்க தலைவர் போப் ஆண்டவரை வாடிகன் நகர் சென்று சந்தித்தார். அப்போது அந்த பாதிரியார் பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளதாகவும் அதற்காக போப் ஆண்டவர் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
போப் ஆண்டவர் பிரேசில் நாட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் அதனால் அங்குப் பிரார்த்தனைகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார். மேலும் அவர் இவ்வாறு பிரார்த்தனைகள் குறைந்ததால் பிரேசில் நாட்டுக்கு கொரோனாவில் இருந்து ரட்சிப்பு இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
போப் ஆண்டவர் இவ்வாறு கருத்து தெரிவித்தது பிரேசில் மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.