பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறும்போது, “நாங்கள் பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த இருக்கிறோம். வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது செலுத்திவிட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதுவரை சிங்கப்பூரில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.