கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்று கண்டறிய அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்
சீனாவில் உருவாகி தற்போது உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும். அங்கிருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதிதான் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான சார்ஸ் கிருமிதான் மரபனு மாற்றமாகி கொரோனா வைரஸாக மாறியுள்ளது என சில பல்கழைக் கழகத்தின் வைரஸ் ஆராய்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சீனர்களின் உணவுப் பழக்கமே காரணம் என்றும், கொரோனா வைரஸ் திட்டமிடப்பட்ட உயிரி ஆயுதம் எனவும் பரப்பி விடப்பட்டது. ஆனால், இது எதுவுமே ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
அதனைத்தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர்கள் சீனாவின் வுஹான் நகருக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதிலும், கொரோனா திட்டமிட்டு பரப்பப்பட்டது என்று நிரூபனமாகவில்லை. ஆனால், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மட்டும் சீனாவின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.
இதனிடையே, வுஹான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2019 இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமீபத்தில் அமெரிக்க உளவு அறிக்கையில் தகவல்கள் வெளியாகியதால், அங்கிருந்தே கொரோனா பரவியிருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக, இந்த வைரஸ் குறித்து வுஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங் (34) கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே எச்சரிக்கை விடுத்தார். அவர் மட்டுமல்லாமல் மொத்தம் 8 மருத்துவர்கள் இதேபோன்று எச்சரிக்கை விடுத்தனர். சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த சீன போலீசார், லி வென்லியாங் உள்பட மொத்தம் 8 பேருக்கு சம்மன் அனுப்பினர். இதனிடையே, துரதிருஷ்டவசமாக கொரோனா தொற்றாலேயே லி வென்லியாங் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்பு கோரியது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் எங்கு தோன்றியது என்று 90 நாட்களுக்குள் கண்டறிந்து தெரிவிக்குமாறு அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். “கொரோனா வைரஸின் தோற்றம் தொடர்பான உறுதியான முடிவுக்கு வரும் வகையில், தகவல்களை சேகரித்து ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள்” என்று ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.