கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகள் அமலில் உள்ளன. கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியதும் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வந்தன.
இதனிடையே, உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனை ஆட்டிப் படைத்தது. இதனால், இங்கிலாந்து அரசு பல்வேறு கட்டங்களாக மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால், தடுப்பூசி போடும் பணியால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதால், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட திட்டத்திற்கு இணங்க, இங்கிலாந்து நாட்டில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சரியாக மேற்கொண்டால், ஊரடங்கின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஜூன் 21ஆம் தேதிக்குள் நீக்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது. ஆனாலும், கொரோனா வைரஸின் மாறுபாடுகள் பரவி வருவதால், சமூகத்தை மிக விரைவாக மீண்டும் திறக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக இருக்கிறது என்றும் இங்கிலாந்து பிரதமர்போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
அவர், அவ்வாறு கூறுவதற்கு பி.1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று அங்கு பரவி வருவதே காரணம் என்று கூறப்பட்டது. இதுவரை 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தகக்து.
இந்த நிலையில், தற்போது உள்ள நிலவரப்படி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. உருமாறிய கொரோனா தொற்றால் ஊரடங்கை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை வரலாம் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் கொரோனா பரவல் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.