யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை யாழ்ப்பாண நாகர் கோவில் மீன்பிடி துறைமுகத்தில் புதைத்து வைக்கப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், உறவினர்கள் அதை மறுக்கிறார்கள்.
இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட்டு, முன்னாள் கடல் புலி உறுப்பினரை கைது செய்துடன் 2 கிலோ சக்திவாய்ந்த கிளைமோர் வெடிகுண்டு, டி -56 துப்பாக்கி ரவைகள் 14, 45 கைத்துப்பாக்கி ரவைகள், 12.7 வகை ரவை ஒன்று மற்றும் இரண்டு மீட்டர் நீள டெட்டனேட்டர் நூல் என்பனவும் மீட்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எனினும், அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சோடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்படுவதாக குற்றம்சுமத்தினர்.
கடந்த தைப்பொங்கல் சமயத்தில், சச்சரவொன்றை தொடர்ந்து இராணுவத்தினருடன் சில இளைஞர்களிற்கு மோதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, சில இளைஞர்கள் தலைமறைவாகியிருந்தனர். அந்த சம்பவத்தில், தற்போது கைதானவரும் தலைமறைவாகியிருந்தார்.
பின்னர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த பின்னணியிலேயே இவர் கைதானதாக உறவினர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.
எனினும்,தற்போது கைானவரி்மிருந்து கைப்பற்றப்பட்டதாக ஒரு தொகுதி வெடிபொருட்களின் புகைப்படங்களையும் இராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.