நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள போது தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் கொடிகாமம் கரம்பகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கரம்பகம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்த போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் இளைஞரைக் கூப்பிட்டு குறித்த இளைஞன் மீது வாள்வெட்டு நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது. இதன்போது குறித்த கும்பல் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் கை விரல் துண்டாடப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டை மேற்கொண்டவர்கள் கொடிகாமம் பாலாவி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பாதிக்கப்பட்டவரின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.