இலங்கை சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய உத்தேச அணியை ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ளார்.
விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்களைக் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் அதேவேளையில் ஐபிஎலில் சிறப்பாக சோபித்த வீரர்களைக் கொண்ட இளம் இந்திய அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப் பயணத்தில் பங்கேற்று தலா மூன்று ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளது.
ஐபிஎல் 14ஆவது சீசனில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதனால், XI அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இலங்கை சுற்றுப் பயணத்தின்போது ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய XI அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே கணித்துக் கூறியுள்ளார்.
“ஓபனர்களுக்கான இடத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்க வீரர்கள் ஷிகர் தவன், பிரித்வி ஷாவை தேர்வு செய்துள்ளேன். மூன்றாவது இடத்தில் சூர்யகுமார் களமிறங்கினால் நன்றாக இருக்கும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு இடத்திற்கு சஞ்சு சாம்சன் பொருத்தமாக இருப்பார். 5ஆவது இடத்தில் மனிஷ் பாண்டே, ஆல்-ரவுண்டர்களாக பாண்டியா பிரதர்ஸ் களமிறக்கினால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக இருக்கும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சாஹல் என்னுடைய உத்தேச XI அணியில் இடம் பிடித்துள்ளார்கள்” எனக் கூறினார்.
ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல் இருவரும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இணைந்து பந்துவீசியது கிடையாது. தற்போது போக்லேவின் உத்தேச XI அணியில் இவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்திய XI அணியிலும் இடம் கிடைக்கும் பட்சத்தில் பட்டையக் கிளப்ப அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.