சகல வேட்பாளர்களும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைக் கொண்டு பல மோசடிகள் செய்தும், இறுதியில் விபரம் தெரியாத முதிர்ச்சியடையாத அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகளை இணைத்து வைத்து பல துறையிலும் உதவி பெற்றுவிட்டு அந்த இயக்கத்தையே கூண்டோடு அழித்து இன்றைய சமுதாயத்தில் புனிதர்களாக பாராட்டப்பட்டு வரும் இரு தலைவர்கள் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பல தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பரலோகம் அனுப்பிவிட்டு வந்து தான் பாராளுமன்ற கதிரைகளில் அமர்ந்து ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பை தேடித்தந்தனர் என தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
முன் ஒரு காலத்தில் புத்தி சாதூர்யமான இனமென சகலராலும் கணிக்கப்பட்டும், மதிக்கப்பட்டும் விளங்கிய தமிழினம் இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் தலைகுனிகின்ற அளவிற்கு இறக்கப்பட்டுள்ளது. மே மாதம் 18ம் திகதியை உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் படுகொலை தினமாக பிரகடனப்படுத்தி அஞ்சலி நிகழ்ச்சியும் வருடா வருடம் நடைபெறுகிறது. தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தம் தம் உறவுகளை நினைவுகூறி அஞ்சலி செலுத்தினார்கள். என் உறவுகளில் பலரை பல்வேறு சந்தர்ப்பங்களில் இழந்த நான் கூட கடந்த 18ம் திகதி எனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
ஆனால் நினைவு கூறப்பட்டது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை முன்வைத்தல்ல, பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிரைப் பறிகொடுத்த ஆத்மாக்களுக்கும் சேர்த்து நினைவு கூறப்பட்டமையால், இச் சம்பவத்தின் முக்கியத்துவம், உண்மை வரலாறு ஆகியவற்றை அறிய எமது எதிர்கால சந்ததியினர் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆகவே முக்கியத்துவம் பெறும் இவ் நிகழ்வு சரித்திரத்தில் ஒரு ஏடாக பதியப்பட வேண்டிய ஒன்றாகும். யுத்தம் நடைபெற்ற இறுதி கட்டத்தில் நடந்த படுகொலைகளே இச் சம்பவத்திற்கு இனப்படுகொலை என பெயர் சூட்டப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
ஒவ்வொருவரும் தாம் தாம் நினைப்பது போல் உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் சம்பவங்களுக்கு பெயர் சூட்டினால் எதிரிகளின் விமர்சனங்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஆகவே இது ஒரு பொது தினமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தினமாக பிரகடனப்படுத்துவது தப்பில்லை. வரவேற்க்கத்தக்கதாகும். ஆனால் இந்த இழப்புக்கள் பலவற்றை பெருமளவில் தவிர்த்திருக்கக் கூடிய ஒரு கூட்டம், தாம் நற்பெயர் எடுப்பதற்காக இச் சந்தர்ப்பத்தை உபயோகிப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
இப்படி ஒரு மோசடி மூலம் விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டவர்கள் நடந்து கொண்ட முறை எந்த நாட்டிலும் எந்த அமைப்பாலும் ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. ஜனநாயகத்திற்கு புகழ் பெற்ற ஒரு நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சோக வரலாறு உரிய முறையில் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தால் சகலரின் பாராட்டுக்களோடு யுத்தம் இலகுவாக தேய்ந்து சமாதானம் நிலவியிருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள், பலகோடி ரூபா பெறுமதியான அவர்களின் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டு தொடர்ந்து வந்த 10 ஆண்டுகள் செல்வம் கொளிக்கும் பூமியாக மாறியிருக்கும்.
பாடசாலை மாணவர்களை ஜனநாயக விரோத செயல்களுக்கு ஈடுபடுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை நாசமாக்கினார்கள். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க யார் காலாக இருந்தார்களோ அவர்கள் பிரிந்து பகுதி பகுதியாக மற்ற அமைப்புக்களுடன் இணைந்து தாங்கள் புனிதர்களாகிவிட்டார்கள் என உலகத்திற்கு காட்டுவதற்காக பாராளுமன்றத்திற்குள்ளே கூட அஞ்சலி நிகழ்த்தி இவ் நிகழ்வை கேலிக்கூத்தாக்கினார்கள்.
இப்படியான ஒரு துன்ப நிகழ்வு ஏற்படக் காரணம் யார்? குறிப்பிட்ட ஒரு சிலரின் விசமத்தனமான செயற்பாட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது குழுவினரை தவிர்த்து ஏனைய எதிர் கட்சிக் குழுவினருக்கு கஷ்டங்கள் பல கொடுத்தும், அவர்களின் வேட்பாளர்களில் சிலரை தாக்கியும், மிகப்பெருமளவில் ஏற்பாடுகள் செய்து உயர் வகுப்பு மாணவர்கள்; உட்பட பல்கலைக்கழக மாணவர்களையும் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்து, வாக்குச் சீட்டுப்பெட்டிகளை நிரப்பியும், இடம் பெயர்ந்த, இறந்த அனைவருடைய வாக்குகளையும் அளித்து உண்மையான வாக்காளர்களை வாக்களிக்கவிடாது தடுத்தும், சகல வாகனங்களையும் தாமே உபயோகித்துக்கொண்டு ஏனையவர்களுக்கு அனுமதி மறுத்தும், சகல அரச அதிகாரிகளையும், வாக்களிப்பு நிலைய பொறுப்பாளர்கள் ஆகியோரையும் வற்புறுத்தி, வாக்குச் சீட்டு அட்டைக்கு, ஒன்றுக்கு மேலதிகமாக வழங்க வைத்தும், பதிவு செய்யப்படாத வாகனங்கள் உட்பட 78 மோட்டார் சைக்கிள்களையும் 06 ஜீப் வண்டிகளையும் இஷ்டம் போல் உபயோகித்துக்கொண்டும், மக்களை வாக்களிக்க விடாது, தேர்தல் தினத்தன்றும் பிரச்சார காலத்திலும் அச்சமூட்டியும், பீதியடையச் செய்தும், 552 வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய ஒவ்வொரு கட்சியை சேர்ந்த 1104 முகவர்களையும் கடமையில் ஈடுபடவிடாது தடுத்தும், தேர்தல் சம்பந்தமான பிரச்சாரங்களுக்கும் கூட்டங்களுக்கும், ஆதரவாளர்களை சந்திப்பதற்கும் தடை விதித்து, பத்திரிகை விளம்பரங்களை அனுமதிக்காமலும் சிலவற்றை தணிக்கை செய்தும், என் மீது மிக மோசமாகவும் கீழ்தரமான முறையிலும் சித்தரித்து கிளிநொச்சி மாவட்டம் முழுவதிலும் தெருக்கூத்து நடாத்தியும், இன ஒற்றமைக்காக அவர் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுவிட்டார் எனப் பொய்பிரசுரங்கள் தயாரித்து விநியோகித்தும் வன்னி மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல, முகமாலை வாக்குச் சாவடியில் நம்ப முடியாத அளவிற்கு நிமிடத்திற்கு மூன்று வாக்குகள் வீதம் அளித்து கூடியிருந்த பல்லாயிரக்கனக்கான மக்களில் வாக்களிக்க உரிமை இல்லாதவர்களும் எவருடைய வாக்கை எவரும் போட அனுமதிக்கப்பட்டும், வாக்களிப்பு நிலையங்களுக்கு மிக அண்மையில் பல்வேறு வாகனங்களில் தங்களுடைய உறுப்பினர்கள், அனுதாபிகள் மூலம் பெருமளவில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களிக்க தூண்டியும் வாக்களிப்பு நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 5 தொடக்கம் 6 வாக்குகள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
சகல வேட்பாளர்களும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைக் கொண்டு இன்னும் பல மோசடிகள் செய்தும், செய்ய அனுமதித்தும் இறுதியில் விபரம் தெரியாத முதிர்ச்சியடையாத அப்பாவி ஏழை மக்களின் பிள்ளைகளை இணைத்து வைத்து பல துறையிலும் உதவி பெற்றுவிட்டு அந்த இயக்கத்தையே கூண்டோடு அழித்து இன்றைய சமுதாயத்தில் புனிதர்களாக பாராட்டப்பட்டு வரும் இரு தலைவர்கள் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பல தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பரலோகம் அனுப்பிவிட்டு வந்து தான் பாராளுமன்ற கதிரைகளில் அமர்ந்து ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பை தேடித்தந்தனர். இது என்னுடைய கருத்தல்ல இலங்கை இராணுவத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையில் வெளியிடப்பட்ட கருத்தாகும்.
2001ம் ஆண்டுத் தேர்தலில் 36000 வாக்ககளுக்கு மேல் எடுத்து யாழ் மாவட்டத்தில் முதலாவதாக வந்த என்னை என்னும் நான்கு ஆண்டுகள் இருக்கத்தக்கதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்களை எனக்கு வாக்களிக்க விடாது மிரட்டி 17 ஆண்டுகள் தமிழ் மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையை செய்யவிடாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பல வகையிலும் இன்று வரை தடுத்து வருகின்றனர்.
நடந்த வரலாற்றை ஊடகங்கள் வெளிக்கொண்டுவரும் கடமை உண்டு. அதே கடமை ஏனைய மொழி ஊடகங்களுக்கும் உண்டு. எந்த தப்பும் செய்யாத எனக்கு துரோகிபட்டம் கட்டும் போது ஊடகங்கள் மௌனம் சாதிக்க வைக்கப்பட்டன. இதற்கு ஊடகங்களிடம் நீதி கேட்கிறேன். ஊடகங்களுக்கு நான் சவால் விடுவதாக ஒருவரும் தப்பாக எண்ணக்கூடாது ஏதோ நியாயப்படுத்தக் கூடிய காரணத்தால் 2004ம் ஆண்டுத் தேர்தலில் நடந்தவை அத்தனையும் மௌனம் சாதிக்க வைக்கப்பட்டன. அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவகையிலும் பாதிக்கப்பட்டனர். அத் தேர்தலில் நடந்த சம்பவங்களை முற்றுமுழுதாக தற்போது தன்னும் நமது ஊடகங்கள் வெளியிடலாம். தவறுவார்களேயானால் பிற மொழி, பிற நாடு ஆகியவற்றின் உதவியை நான் நாட நேரிடும். இது சவாலல்ல தாழ்மையான வேண்டுகோள். இறுதியாக மக்களிடம் வேண்டுவது பறிக்கப்பட்ட உரிமையை மீட்டுத்தாருங்கள் என்பதே என தெரிவித்துள்ளார்.