மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
சென்ற பெப்ரவரி 1ஆம் திகதி நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு முதன்முறையாக நேற்று முன்தினம் அவர் வெளியுலகில் காணப்பட்டார்.
ஆங் சான் சூச்சியின் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் அவர் உட்பட 4,000 பேரைத் தடுப்பு காவலில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை வைத்திருந்தது, அரசாங்க இரகசிய சட்டத்தை மீறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
நீதிமன்றத்தில் காணப்பட்ட சூகி, 75, நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும் விசாரணைக்கு முன்பு அவரது சட்டக் குழுவுடன் 30 நிமிட சந்திப்பு நடத்தியதாகவும் அவரது சட்டத்தரணி தாயே மவுங் மவுங் கூறினார்.
தனது சட்டத்தரணிகளுடனான சந்திப்பின்போது ‘மக்களின் ஆரோக்கியத்தை விரும்புவதாக’ அவர் சொன்னார். மேலும் விரைவில் கலைக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சியைப் பற்றியும் அவர் வெளிப்படையாக குறிப்பிட்டார்.
“மக்களுக்காக கட்சி நிறுவப்பட்டது, எனவே மக்கள் இருக்கும் வரை கட்சி இருக்கும்” என்று சூகி சொன்னதாக மவுங் கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் சூகியின் கட்சி மோசடி செய்ததாகக் கூறும் இராணுவ ஆட்சிக் குழுவின் தேர்தல் ஆணையம் அவரது கட்சியைக் கலைக்கப்போவதாக ஆணையரை மேற்கோள்காட்டி வெளிவந்த வெள்ளிக்கிழமை ஊடக செய்தி தெரிவித்திருந்தது.