அஸ்வின் காகமனு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு அவருக்கு தொற்று ஏற்பட்டது. தடுப்பூசியால் தான் தனக்கு விபரீதம் எதுவும் நடக்கவில்லை என்கிறார் அவர்.
அஜித்தின் மங்காத்தா படம் மூலம் பிரபலமான அஸ்வின் காகமனுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தற்போது குணமாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் தன் போராட்டம் குறித்து கூறியதாவது, நான் ஏப்ரல் 3ம் தேதி தான் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டேன். இரண்டாம் அலை துவங்கும் முன்பு எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அதிர்ச்சியாக இருந்தது. எங்கிருந்து எனக்கு பாதிப்பு வந்தது என்று தெரியவில்லை. ஏப்ரல் 15ம் தேதி எனக்கு அறிகுறிகள் ஏற்பட்டது. தொண்டை வலி, உடம்பு வலி ஏற்பட்டதும் பரிசோதனை செய்து கொண்டேன் என்றார்.
கொரோனா பாசிட்டிவ் என்று வந்த பிறகு முதல் 5 நாட்களுக்கு வீட்டில் தான் இருந்தேன். அதன் பிறகு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு நான்கு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தேன். தடுப்பூசி மட்டும் போடாமல் இருந்திருந்தால் என் நிலைமை மோசமாகியிருக்கும். தடுப்பூசி தான் தொற்றின் தீவிரத்தை குறைத்திருக்கிறது. மக்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
என்னை அடுத்து என் மனைவிக்கு சில அறிகுறிகள் ஏற்பட்டது. பரிசோதனை செய்தபோது அவருக்கு கோவிட் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் அவருக்கு ருசி தெரியவில்லை, வாசனை தெரியவில்லை. நான் போகும் ஜிம்முக்கு போன் செய்து அங்கிருப்பவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறினேன். என்னையும் கவனித்துக் கொண்டு, மகளையும் பார்த்துக் கொண்டு என் மனைவி தான் கஷ்டப்பட்டார். என் மகளுக்கும் உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. அவருக்கு காய்ச்சலாக இருந்தது என்று அஸ்வின் கூறியுள்ளார்.
நாம் இளமையானவர், நமக்கு கொரோனா வராது என்று நினைப்போம். ஆனால் இந்த இரண்டாம் அலையில் அப்படி இல்லை. எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முந்தைய நாள் என் மகள், மனைவி, மாமியார், மாமனாருடன் இருந்தேன். அதனால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்தேன். எனக்கு இரண்டு வயது குழந்தை இருப்பதால், அவருக்கும் வந்துவிடுமோ என்று தான் பயம். எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு 17 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் என்கிறார் அஸ்வின்.