பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது காதலியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (56), தனது காதலி கரி சைமண்ட்ஸ் (33) உடன் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனிடையே, கடந்த பெப்ரவரி மாதத்தில் தாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக பொரிஸ் ஜோன்சன் – கரி சைமண்ட்ஸ் தம்பதி அறிவித்தனர்.
இந்த நிலையில், பொரிஸ் ஜோன்சன் தனது காதலியை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான திருமண அழைப்பிதழ்களை தங்களது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் அந்த தம்பதி அனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முரட்டுத்தனமான தோற்றம், அருமையான சொற்பொழிவு உள்ளிட்டவற்றுக்காக நன்கு அறியப்பட்ட பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஏற்கனவே மெரீனா வீலர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக பொரிஸ் ஜோன்சன், மெரீனா வீலர் ஆகியோர் அறிவித்து முறையாக விவாகரத்து பெற்றுள்ளனர்.
பொரிஸ் ஜோன்சனுக்கு மெரீனா வீலருக்கு முன்பு அலெக்ரா மாஸ்டைன் ஓவன் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகியுள்ளது. இந்த நிலையில், தனது காதலி கரி சைமண்ட்ஸை மூன்றாவதாக பொரிஸ் ஜோன்சன் திருமணம் செய்யவுள்ளார்.