யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து வரும் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த வீதியின் ஒரு பகுதி நேற்று முதல் பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
ஓடக்கரை வீதியின் முடக்கப்பட்ட குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் வசித்து வரும் 11 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் வசித்து வந்த அந்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்திருந்தார். அவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அவரது இறுதிச்சடங்கு பருத்தித்துறையில் நடந்தது. அந்த மரண வீட்டிற்கு சென்று வந்தவர்கள் பலரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மரண வீட்டிற்கு வந்த யாரோ ஒருவருக்கு தொற்று இருந்திருக்கலாமென சுகாதாரப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த பகுதியிலுள்ளவர்கள் மற்றைய பகுதிகளிற்கு செல்லாமலும், மற்றைய பகுதிகளிலுள்ளவர்கள் அங்கு செல்லாமலும் முடக்கி, நோயாளிகளை முழுமையான இனம்காணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.