கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில்குமார் வடக்கு ரயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர். மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார்.
இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர். கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை ஹரியாணா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். இதற்கிடையே, மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்தனர். இதற்கிடையில், ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுஷில் குமாரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஒலிம்பிக் வெற்றியாளரான சுஷில்குமார் இந்திய ரயில்வேயில் பணியாற்றி வந்தார். வடக்கு ரெயில்வேயில் மூத்த வணிக மேலாளராக சுஷில்குமார் பணியாற்றி வந்தார்.
தற்போது, கொலை வழக்கில் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ரயில்வே பணியில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுஷில்குமார் பணிநீக்கம் செய்யப்படுவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது