ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் நேற்று முந்தைய தினம் எரிமலை வெடித்ததில் இருந்து தொடர்ந்து லாவா குளம்புகள் வெளியேறி வரும் நிலையில், இதில் தற்போதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் அளித்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு நைராகோங்கோ எரிமலை வெடித்து, கோமா நகரத்தைத் தாக்கியதால், அங்கிருந்த 5,000 பேர் எல்லையைத் தாண்டி ருவாண்டாவிற்கு தப்பிச் சென்றனர். மேலும் 25,000 பேர் சாகேவில் வடமேற்கில் தஞ்சம் புகுந்ததாக ஐ.நா குழந்தைகள் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
170’க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. மேலும் யுனிசெப் அதிகாரிகள் பேரழிவைத் தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ போக்குவரத்து மையங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.
கோமா நகரம் கடைசியாக 2002’ல் எரிமலை வெடித்த போது மிகப்பெரும் அழிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். மேலும் 100,000’க்கும் மேற்பட்ட மக்கள் வீடற்ற நிலையில் இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை எரிமலை வெடித்தவுடன், காங்கோ குடியரசில் ஐநா அமைதி காக்கும் படைப்பிரிவில் பணியாற்றும் இந்திய ராணுவத்தினர் உடனடியாக களமிறங்கி அங்குள்ள மக்கள் மற்றும் ஐநா அதிகாரிகளை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.