சமந்தா நடித்திருக்கும் தி ஃபேமிலி மேன் 2 இந்தி தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியிருக்கிறார்.
சமந்தா, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 இந்தி தொடரில் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய தகவல் – ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதினார்.
தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதியுங்கள்: மத்திய அமைச்சருக்கு வைகோ கடிதம்
இந்நிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜும் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
ஈழத்தமிழர்களை தவறாகவும், மோசமாகவும், மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்புவாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
நெடிய ஜனநாயகப் போராட்டக் களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ்ப் பண்பாட்டின் மதிப்புகளைக் கொண்டதாக இல்லை.
பெருமைமிகு தமிழ்ப் பண்பாட்டை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிப்பரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டது என கருத முடியாது. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பேசும் நடிகையான சமந்தாவை தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தியுள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது.
இந்தத் தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது, இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும்.
மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவது கடினமாகும்.
இந்தச் சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்தத் தொடரை, தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.