பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பாதுகாவலர் குமார் ஹெக்டே. பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு, மோசடி ஆகிய வழக்குகள் குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பாதுகாவலரான குமார் ஹெக்டே மீது 30 வயது பெண் மும்பை டி.என். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்ததாக குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாக்குறுதி அளித்தாராம் குமார் ஹெக்டே.
இது குறித்து டி.என். நகர் காவல் நிலைய மூத்த போலீஸ் அதிகாரி பரத் கெய்க்வாட் கூறியதாவது,
குமார் ஹெக்டே என்பவர் மீது 376, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து, பிரிந்துவிட்டனர் என்றார்.குமார் ஹெக்டே கங்கனா ரனாவத்தின் பாதுகாவலர் தானே என்று கேட்டதற்கு, அவர் என்ன வேலை செய்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது என்று பரத் கெய்க்வாட் கூறினார்.
குமார் ஹெக்டே பற்றி அந்த பெண் கூறியதாவது,
8 ஆண்டுகளுக்கு முன்பு நான் குமார் ஹெக்டேவை சந்தித்தேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். நானும் சரி என்று கூறினேன். அதன் பிறகு அவர் பலமுறை என்னை கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி என் வீட்டில் இருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்றார்.
குமார் ஹெக்டே கங்கனாவின் பாதுகாவலர் என்கிற அடையாளத்தை உறுதி செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். ஆனால் சில இந்தி ஊடகங்கள் குமார் கங்கனாவின் பாதுகாவலர் தான் என்று உறுதி செய்துள்ளன.
குமார் ஹெக்டேவை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து கங்கனா ரனாவத் இதுவரை எதுவும் கூறவில்லை. கெரியரை பொறுத்தவரை ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்திருக்கிறார் கங்கனா. அந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் ட்விட்டர் நிர்வாகம் கங்கனாவை கணக்கை முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.