இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களின் தொகை குறித்த குழப்பம் நீடித்து வந்த நிலையில், 3 தமிழ் கட்சிகள் இணைந்து கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் இறுதி முடிவிற்கு வந்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொல்லப்பட்ட மக்கள் குறித்த அண்ணளவான முடிவிற்கு வந்துள்ளனர்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40,000 தொடக்கம் 60,000 வரையான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாமென மூன்று கட்சிகளும் தீர்மானித்துள்ளன. அத்துடன், அதை எழுத்துமூலமாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு, 3 தமிழ் கட்சிகள் கையெழுத்து கடிமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்திலேயே கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இரா.சம்பந்தன் தவிர்ந்த கூட்டமைப்பின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (இரா.சம்பந்தன் விடுமுறை), தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், வேலு குமார் (பழநி திகாம்பரம் விடுமுறை) கையெழுத்திட்டு இரண்டு தினங்களின் முன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு இந்த கடிதத்தை அனுப்பினர்.
தூபி இடிக்கப்பட்ட விடயம் எங்களை அதிர்ச்சியிலும், வேதனையிலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தையும் ஆவணப்படுத்தி எதிர்கால ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் கவனமெடுக்கும்படி கோரப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் முள்ளிவாய்க்காலில் மூடப்பட்ட வலயத்தில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40,000 தொடக்கம் 60,000 வரையான மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபி என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களும், க.வி.விக்னேஸ்வரனும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக பகிரங்கமாக கூறி வருகிறார்கள்.
எனினும், ஐ.நா போன்ற உயர்சபையொன்றிற்கு அனுப்பிய கடிதத்தில் 60,000 இற்கும் உட்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவே குறிப்பிட்டுள்ளனர். இதில் 13 தமிழ் எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான கணக்கெடுப்பெதுவும் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், கொல்லப்பட்ட மக்களின் தொகையென தமிழ் எம்.பிக்களே ஒரு தொகையை தீர்மானித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.