சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் அந்தமான் தீவுகளில் முழுமையாகவும் தெற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சிறிது தொலைவும் முன்னேறி உள்ளது.
இதையொட்டி, மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. அது வலுப்பெற்று, நாளை புயலாக வலுவடையும். இது, வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் வங்க தேச கரையை, 26ம் தேதி கடக்கலாம். இதன் காரணமாக, வங்க கடலின் தமிழக, ஆந்திர கடற் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் மணிக்கு, 75 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.
எனவே, மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். புயல் உருவாவதால் தமிழக பகுதிகளில் தரைக்காற்று, வடமேற்கு திசையில் இருந்து வீச வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்களில் இயல்பை விட, நான்கு டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்ப நிலை பதிவாகும். சென்னையில், வானம் மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக நாளை உருவாகும் புயலுக்கு ‘யாஸ்’ என்ற அரேபிய மொழி பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓமன் நாட்டில் இருந்து இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த புயல், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச கடற்பகுதிகளில், கன மழையை கொடுக்கும் என்பதால் அங்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.