கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மே 30 அன்று நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஏழாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் எதுவும் பாஜக நடத்தாது என்று கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தெரிவித்தார்.
கட்சி பல்வேறு நல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் என்று கூறிய பாஜக தலைவர், மே 30 அன்று கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டங்களைத் தொடங்குமாறு கட்சி பாஜக ஆளும் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்.
“மே 30 ஆம் தேதி மத்திய அரசின் 7 வது ஆண்டு நிறைவு நாளில், அனைத்து பாஜக ஆளும் மாநிலங்களும் கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக ஒரு பெரிய அளவிலான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தொற்றுநோய் காரணமாக எந்தவொரு கொண்டாட்ட நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படாது.” எனக் கூறினார்.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசாங்கம் ஏழு ஆண்டுகள் பதவியில் உள்ளது மற்றும் அதன் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டு ஆண்டுகள் மே 30 அன்று நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இந்தியா நேற்று ஒரே நாளில் 2.57 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,62,89,290 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் 3 லட்சத்தை விட குறைவாக இருப்பது இது தொடர்ந்து ஆறாவது நாள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.