35 வயதான கொரோனா நோயாளி ஒருவர் இன்று மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய படுக்கைகள் இல்லாதது என கடும் அழுத்தத்தை சுகாதாரத்துறை எதிர்கொண்டு வந்த நிலையில், தற்போது நிலைமை சற்று மேம்பட்டுள்ளதுஎனினும், கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, பொருளாதார சிக்கல்கள் என மக்கள் தொடர்ந்து கடும் மன அழுத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் நகரில் ஒரு நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபர் ஒரு இரும்புக் கம்பியிலிருந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.எனினும் அவர் எதற்காக இந்த நடவடிக்கையை எடுத்தார் என்பதற்கான சரியான காரணம் ஆராயப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மனைவி செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனை அதிகாரிகள் யாரையும் சந்திப்பதைத் தடுத்ததால், அவர் தொடர்ந்து தனது கணவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும், மேலும் கணவர் தனது பேச்சில் அவர் எடுத்த விவசாயக் கடன் குறித்து மனமுடைந்து பேசி வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் கடனை எவ்வாறு அடைப்பது என்ற மன அழுத்தத்தில், அவர் இந்த துயர முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. எனினும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.