நாட்டிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் கொவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்தும் முகமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் மற்றும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டீ.சுஜித் பிரியந்த ஆகியோரின் தலைமையில் சாய்ந்தமருதின் பொது இடங்கள், கடற்கரை, மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் திடீர் சுற்றி வளைப்பு இடம்பெற்றது.
பாதுகாப்பு துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த சுற்று வளைப்பின் போது சுகாதார நடைமுறைகளை மீறி இப்பிரதேசங்களில் கூடியவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் முகக்கவசம் அணியாதோர்கள், சமூக இடைவெளியை பேணாதோர், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோர் என 23 பேர் இனம்காணப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குத் தாக்குதலும் செய்யப்பட்டது. மேலும் இந்த சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டது போன்று எதிர்வரும் காலங்களிலும் இதைவிட அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக இரண்டு துறையினர்களும் அறிவித்துள்ளனர்.
இச்சுற்றிவளைப்பில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன், பொதுச் சுகாதார பரிசோதகர் குழு, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், கல்முனை பொலிஸார், மற்றும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர் குழுவும் கலந்து கொண்டது.