கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் பொது முடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகள் அமலில் உள்ளன. கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியதும் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வந்தன. இதனிடையே, கொரோனாவின் இரண்டாவது அலை, மூன்றாவது அலை உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், தடுப்பூசிகள் காரணமாக பெரிய அளவில் பாதிப்பில்லாத நாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக் அங்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தியேட்டர்கள், உணவு விடுதிகள், அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத இதர கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடற்கரைகளும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக பிரான்ஸில் ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சினிமா தியேட்டர்களில் தற்போது 35 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வருகிற ஜூன் 9ஆம் தேதி முதல் 65 சதவீதமும், ஜூன் 30ஆம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கும் தியேட்டர்களில் அனுமதியளிக்கப்பட உள்ளது.