42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று (21) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை, ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு வேலைக்கு ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தின் கொக்கி உடைந்ததால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
உழவு இயந்திரத்தில் முன்பகுதியில் சாரதி அமர்வதற்கான பகுதி இருக்கும். அதன் பின்னர் உள்ள பகுதியிலேயே கொக்கி மூலம் பெட்டி பொருத்தப்படும். அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் பயணித்தவர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சிறியதொரு பெட்டியில் பொறுப்பற்ற விதத்தில் 42 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தொழில் பாதுகாப்பற்ற வகையிலேயே அவர்களை நிர்வாகம் அழைத்து வந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விபத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமானதொரு சூழ்நிலை நிலவியது.
–க.கிஷாந்தன்-