மட்டக்களப்பு வாழைச்சேனை சுற்று வளைவு சந்தியில் சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலை இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
முத்தமிழ் வித்தகரும் தமிழ் பண்டிதருமான சுவாமி விபுலானந்தருக்கு மலர் மாலை அணிவித்தும் அவரது புகழ் பாடியும் இவ் நிகழ்வு நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தர் உலகப் புகழ் பெற்ற ஒரு தமிழ் பெரியார், கிழக்கு மண் ஈன்றெடுத்த இயல்,இசை ,நாடகம் என்ற முத்தமிழும் கைவரப் பெற்ற முத்தமிழ் வித்தகர் ஆவர் என இராஜங்க அமைச்சர் தமது உரையில் தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து மேலும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
அவரது உருவச் சிலையை இவ்விடத்தில் திறந்து வைப்பதன் மூலம் பெருமையடைகின்றேன். இவ்விடத்தில் இச் சிலையை நிறுவ எமது முற்போக்கு உறவுகள் முன்னெடுத்தபோது பல விமர்சனங்களும் சவால்களும் வந்ததாகவும் தெரிவித்தார்.
ஒரு சிலர் அவரை மதவாதியாகவும், இனவாதியாகவும் சித்தரித்தனர். அவர்களுக்கு சுவாமி விபுலானந்தர் யார் என்ற தெளிவின்மையே இதற்கான காரணமாகும்.
அவர் இனத்தை, மதத்தை கடந்த தமிழ் பெரியார் ஆவார். எமது முற்போக்கு தமிழர் கழகம் கலை, பண்பாட்டு பாசறையாகும்.
எமது மாவட்டத்தில் தமிழுக்கும், சமூகத்திற்கும் சேவை செய்த பெரியார்களை நினைவு கூறுகின்ற திருவுருவச் சிலைகளை நிறுவுகின்ற பணிகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் மிகவிரைவில் கிரான், செங்கலடி மற்றும் கொக்கட்டிச் சோலை ஆகிய இடங்களில் உள்ள முச்சந்திகளில் அவற்றை நிறுவ உள்ளதாகவும் தமது உரையின் போது இராஜங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்விடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டதுடன் வாகன போக்குவரத்திற்கான ஒளி சமிக்ஞை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.