அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை ரூ .5000.க்கு விற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
அஸ்ட்ராஜெனேகா முதலாவது டோஸை செலுத்தியவர்கள், இரண்டாவது டோஸை செலுத்த திண்டாடி வரும் நிலையில், இரண்டாவது டோஸூக்கு தடுப்பூசியை விற்க முயற்சித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளதாக GMOA உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இலங்கையில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதால், பல்வேறு இடங்களில் மக்கள் வரிசையில் நிற்கும் நிலையை ஏற்படுத்தியது என்றார்.
சில நபர்களின் இந்த தீங்கிழைக்கும் முயற்சிகள் அரசாங்கத்தின் தொடர்ச்சியான தடுப்பூசி இயக்கத்தை பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கும் என்றும் எச்சரித்தார்.
இதுபோன்ற முறையில் தடுப்பூசிகளை விநியோகிப்பது, குறிப்பாக ஒன்லைன் விளம்பரங்கள் மூலம், தடுப்பூசி பெறும் நபர் எதிர்பார்த்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பைப் பெற முடியாது என்று அவர் எச்சரித்தார்.
விஞ்ஞான முறையின் அடிப்படையில் தடுப்பூசி தயாரிக்கப்படுவதாகவும், அதன் முழுமையான தாக்கத்திற்கான நடைமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் விளக்கினார்.
இந்த தடுப்பூசி மோசடியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ள தடுப்பூசிகள், மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் கைகளை எவ்வாறு அடைந்தன என்பது குறித்து விசாரிக்க சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.