அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஒரு இந்தியருக்கு, விவாகரத்து வாங்கிய மனைவியைக் கடத்திய குற்றச்சாட்டில் 56 மாத சிறைத்தண்டனையும், மூன்று ஆண்டுகள் காவல்துறையின் கண்காணிப்புடன் கூடிய விடுதலையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 32 வயதான சுனில்.கே.அகுலா தனது தண்டனை முடிந்ததும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கபப்டுகிறது. கடந்த நவம்பரில், கடத்தல், பின்தொடர்தல், நீதிக்கு இடையூறு மற்றும் சாட்சியை சேதப்படுத்திய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, ஓகஸ்ட் 6, 2019 அன்று, அகுலா டெக்சாஸில் உள்ள தனது வீட்டிலிருந்து மாசசூசெட்ஸின் அகாவம் வரை சென்று தனது முன்னாள் மனைவியிடம் அத்துமீறியுள்ளார். பின்னர் அவர் தனது மனைவியைத் தாக்கி, தனது குடியிருப்பை விட்டு வெளியேறி, அவருடன் ஒரு காரில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார். அவர் அவளை மீண்டும் டெக்சாஸுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
அகுலா பின்னர் தனது மனைவியை பல மாநிலங்கள் வழியாக ஓட்டிச் சென்றார். அந்த நேரத்தில் அவர் மீண்டும் மனைவியைத் தாக்கினார். மேலும் பணியிலிருந்து ராஜினாமா செய்வதாக மின்னஞ்சலை தனது முதலாளிக்கு அனுப்பும்படி கட்டாயப்படுத்தினார். மேலும் அவரது மடிக்கணினியை அடித்து நொறுக்கி நெடுஞ்சாலையின் ஓரத்தில் வீசினார்.
அகுலா ஒரு நாக்ஸ் கவுண்டி, டென்னசி ஹோட்டலில் நிறுத்தினார் என்றும் அங்கு அவர் மீண்டும் தனது மனைவியை அடித்தார் என்றும் சட்டத்தரணிகள் கூறினர். இதற்கிடையில் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் விஷயம் சென்று அவர்கள் அகுலாவை கைது செய்தனர்.
அகுலா காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவர் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்புகளைச் செய்தார். சட்ட அமலாக்கத்திற்கான தனது அறிக்கைகளைத் திரும்பப் பெறும்படி தனது மனைவியின் தந்தையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் அகுலாவின் துன்புறுத்தல்களுக்கு தண்டனை கிடைப்பதில் அவரது முன்னாள் மனைவி உறுதியாக இருந்ததால், தற்போது நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை உள்ளதை அறிந்து தண்டனை அளித்துள்ளது.