ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் பஹாடியா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.1980-81 ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக செயல்பட்டவர் ஜெகநாத் பஹாடியா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெகநாத் அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார். 89 வயதான ஜெகநாத் பஹாடியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகநாத் பஹாடியா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெகநாத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும், ஜெகநாத் பஹாடியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் மாநிலத்தில் 1 நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் எனவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.