உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுபோக, புதுப்புது உருமாறிய கொரோனா வைரஸ்கள் கிளம்பி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல நாடுகளில்
பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலும் வெளிநாடுகளுக்கு இடையேயான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணத் தடையை விலக்கிக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புருசல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் பயணத் தடையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை அமலில் இருக்கிறது.
ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் பயணத் தடை அமலில் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தொழில்கள் மீண்டும் தொடங்கி வருகின்றன. இந்நிலையில், பயணத் தடையையும் ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.