கொழும்பு துறைமுக நகரத்திற்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்திற்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்கள் 70 ஆண்டுகளிற்கும் மேலாக தமது அரசியல் அதிகாரங்களிற்காக போராடி வருகிறார்கள். சொந்த நாட்டு மக்களிற்கு அதிகாரங்களை வழங்க மறுக்கும் அரசு, சீன தனியார் நிறுவனங்களிற்கு அதிகாரங்களை வழங்குகிறது என சாடியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான புளொட் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
துறைமுக நகர திட்டத்தின் மூலம் மிகப்பெருமளவு நிதி நாட்டுக்குள் வரும், பொருளாதாரம் வளர்ச்சியடையும் என அரசாங்கம் கூறுகிறது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடையை ஓரளவு சரி செய்யுமென அரசு கூறுகிறது.
அண்மையில் எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 400 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டத்தை அரசாங்கம் நிறுத்தியது. அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கு வந்து விடும் என கூறி நிறுத்தினார்கள்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் கடந்த அரசு 2017ஆம் ஆண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டது. இதில் அதானி நிறுவனம் ஏறக்குறைய 700 மில்லியன் டொலர் முதலீடு செய்யவிருந்தது.
எனினும், துறைமுக தொழிற்சங்கங்களும், நாட்டு மக்களும் எதிர்ப்பதாக கூறி இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
நிதிகள் நாட்டுக்கு வருவது, பொருளாதாரத்தை வளர்ப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமெனில் அந்த திட்டங்களை அரசாங்கம் கைவிட்டிருக்க தேவையில்லை.
ஆனால் சீனா என்றால்- அது எந்த அரசென்றாலும்- 99 வருடங்களிற்கு ஹம்பாந்தோட்டையை வழங்கினார்கள், துறைமுக அபிவிருத்தியையும் சீனாவிடம் வழங்க முயற்சிக்கப்படுகிறது.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூலம் தனிநாட்டுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 70 வருடங்களாக, சாத்வீக ரீதியிலும் ஆயுத ரீதியிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காக போராடி வருகிறார்கள். இந்த நாட்டு மக்களாக எமக்கே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பாமல், மறுக்கப்பட்டு வந்துள்ளது.
2002 ஆண்டு யுத்த நிறுத்த காலத்தில் இணை அனுசரணை நாடுகள் 4000 கோடி ரூபாயை முதலிட தயாரென அறிவித்தார்கள். புலம்பெயர் தமிழர்களும் பல ஆயிரம் கோடி ரூபாவை முதலிட தயாராக இருந்தார்கள். இதற்கெல்லாம் முதல், மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட சபை ஒன்றை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால், அரசாங்கம் அதை செய்யாமல் தயங்கிக் கொண்டிருந்தீர்கள்.
உங்களது சொந்த நாட்டு மக்களின் அதிகாரங்களை வழங்க முடியாத நீங்கள், சீன நிறுவனத்திற்கு இலங்கையின் அதிகாரங்களை வழங்குகிறீர்கள். அதற்கான முயற்சியாகவே இந்த சட்டமூலம் பார்க்கப்படுகிறது.
இது நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.
துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதை போன்ற அதிகாரங்களை வழங்கி, வடக்கு கிழக்கிற்கான சபை ஒன்றை- மக்களால் தெரிந்தெடுக்கப்படுவது- அமைத்தால், வடக்கு கிழக்கிற்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கும் அனுகூலமாக அமையும். பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவு நிதி கொண்டு வரப்படும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தை கூட இல்லாமல் செய்யும் ஒரு முயற்சி அரசிலுள்ள சிலரால் முன்னெடுக்கப்படுகிறது. அது ஜே.ஆர்- ரஜீவ் ஒப்பந்தமென நீங்கள் சிலர் நினைக்கலாம். ஆனால் இரண்டு நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பு தொடரும் ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது.
குறைந்த பட்சம் 13வது திருத்தத்தையாவது முழுமையாக இந்த அரசு அமுல்ப்படுத்தினால், தமிழ் மக்களின் பிரச்சனைகள் ஓரளவு தீர்க்கப்படும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.