இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருவதால் மயானங்கள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஐசியூ படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இம்மாத இறுதியில் தினசரி கோவிட்-19 பாதிப்புகள் 1.5 லட்சமாக குறையும். ஜூலை மாத இறுதியில் தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக சரியும். எனவே வரும் ஜூலை மாதம் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
அதன்பிறகு 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் மேலும் உருமாறும் போது மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளனர். அதற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை விரைவுபடுத்த வேண்டும். புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருப்பது அவசியம். நமது உடலில் ஆன்டிபாடிகள் குறைந்துவிட்டால் கொரோனா வைரஸ் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தடுப்பூசி ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும். எனவே தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் மாநில, மாவட்ட, நகர வாரியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டால் பிரச்சினை பெரிதும் குறையும். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும் என்பதால் மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
அப்படியே உருவாகத் தொடங்கினாலும் எளிதாக எதிர்கொள்ளலாம். எனவே தடுப்பூசியை அனைத்து வயதினருக்கும் செலுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.