டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு பிறகு அங்கேயே தங்கியிருக்கும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஆக., 4ம் தேதி தொடங்குகிறது.
இந்திய வீரர்கள் மே 19ந்தேதி மும்பைக்கு வருவதற்கு முன்பாக 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்தப் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வீரர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் காலம் 24 ஆக உயர்த்தி பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேவேளையில், மும்பையில் இருக்கும் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரகானே, ரோகித் சர்மா மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் 24ம் தேதி மும்பையில் உள்ள ஓட்டலில் பாதுகாப்பு வளையத்திற்குள் இணைய உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட விருதிமான் சஹாவும் விரைவில் மும்பை வர உள்ளார். 2 வாரங்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த பிறகு இங்கிலாந்திற்கு இந்திய வீரர்கள் தனிவிமானம் மூலம் புறப்பட்டு செல்ல உள்ளனர். அங்கு சவுத்தம்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட இருக்கின்றனர்.




