இஸ்ரேலிய ஜனாதிபதி ருவன் ரிவ்லின், காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனிய போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய பெண்ணின் குடும்பத்தினருடன் நேரடியாக தொடர்பு கொண்டு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான சவுமியா சந்தோஷ், தெற்கு இஸ்ரேலிய கடலோர நகரமான அஷ்கெலோனில் உள்ள ஒரு வீட்டில் ஒரு வயதான பெண்மணியுடன் ஒரு பராமரிப்பாளராக பணிபுரிந்த நிலையில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தார்.
சவுமியா சந்தோஷ் கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் வசித்து வந்தார். இவருக்கு ஒன்பது வயது மகன் உள்ளார். குழந்தையும் கணவரும் கேரளாவில் உள்ளனர்.
80 வயதான முதியவரின் பராமரிப்பாளராக சவுமியா பணியாற்றும் வீட்டின் மீது நேரடியாக ஹமாஸ் ஏவிய ராக்கெட் தாக்கியது. அவர்களால் சரியான நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. மேலும் வீட்டிற்கு சொந்தமாக ஒரு பாதுகாப்பான அறை இல்லை. இதில் முதியவர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் சவுமியா உயிரிழந்தார்.
அவரது உடல் மே 14 அன்று விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு மறுநாள் தனது சொந்த ஊரை அடைந்தது.
பின்னர் இந்தியாவுக்கான இஸ்ரேலின் தூதர் டாக்டர் ரான் மல்காவும் கடந்த வாரம் குடும்பத்தினருடன் பேசினார். சவுமியாவின் குடும்பத்திற்கு இஸ்ரேல் சார்பாக இரங்கல் தெரிவித்ததோடு, ஒட்டுமொத்த இஸ்ரேலும், சவுமியாவின் குடும்பத்திற்கு எப்போதும் உதவுவதற்காக தயாராக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது இஸ்ரேல் அதிபர் தானே நேரடியாக இந்திய பெண்ணின் குடும்பத்தினருடன் பேசி தனது இரங்கலைத் தெரிவித்தார். எனினும் அப்போது அவர் பேசிய விபரங்களை இஸ்ரேல் அரசு முழுமையாக வெளியிடவில்லை.