தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவருடன் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்றது. இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடனான இணையவழி கலந்துரையாடல் ஒன்றில் காஜல் பங்கேற்றார். அதில் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து அவர் பதிலளித்துள்ளார். இது குறித்து காஜல் கூறியதாவது:
என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர். இதனால் என்னால் சுலபமாக சினிமாவில் கவனம் செலுத்த முடிகிறது. ஆனால் இன்னும் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. என் கணவர் கவுதம் கேட்டுக் கொண்டால் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன். ஆனால் அதுவரை ஒப்பந்தமான படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளேன். சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் மீண்டும் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.