25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இந்தியா

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா காலமானார்!

வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லி’, ‘கரிசல் இலக்கியத்தின் பிதாமகர்’ என்றெல்லாம் போற்றப்படும் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் இன்று (18) காலமானார். அவருக்கு வயது 99.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி பிறந்தவர் கி.ராஜநாராயணன். கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.

7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா. விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்குப் பின்னரே எழுத்தாளர் ஆனார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958இல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானது. வாசகர்களிடம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.

கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார். வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர்.

பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007இல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009இல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளிவந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். ‘கோமதி’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப் பித்தன்’, ‘மாமலை ஜீவா’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

 

‘கிடை’ என்ற இவரது குறுநாவல் ‘ஒருத்தி’ என்ற திரைப்படமானது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். நல்ல இசைஞானம் கொண்டவர். நண்பர்களுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுவார். அவர்கள் எழுதும் பதில் கடிதங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்.

கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக இவருக்கு 1991இல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கி.ரா.வின் மனைவி கணவதி அம்மையார் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்துள்ளார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர். முதலாமவர் அவரது வாசகர், மற்ற இருவர் அவரது மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ‘மிச்சக் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பை கி.ரா. கொண்டுவந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கி.ரா. இன்று காலமானார்.

லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் கி.ரா.வின் உடல் இன்று மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

புலிப்பூச்சாண்டி வேண்டாம்: பழ.நெடுமாறனின் விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் கவனம் பெற்ற இன்பநிதி

Pagetamil

Leave a Comment