டெல்லியில் பிரதமர் மோடியை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தன்னையும் கைது செய்யுமாறு ஓவியா ட்வீட் செய்திருக்கிறார்.
கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது. இந்நிலையில் நம் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுவரொட்டிகள் பற்றி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் கூலிக்காக சுவரொட்டி ஒட்டியவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுவரொட்டிகளுக்கு பின்னால் இருக்கும் நபர் அல்லது நபர்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கைது சம்பவத்தை கண்டித்து, தங்களையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி, ப்ரியங்கா வாத்ரா உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
சுவரொட்டி கைது விவகாரம் குறித்து மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களையும் கைது செய்யுங்கள் என பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது என்ன ஜனநாயகமா இல்லையா என்று கேட்டு தன்னையும் கைது செய்யுமாறு ஓவியா ட்வீட் செய்துள்ளார்.
ஓவியாவின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
தலைவிக்கு தில்ல பார்த்தியா?. இப்போ அந்த கோஷ்டியினர் வந்து ஓவியா ஒரு கிறிஸ்தவர், நடிகை, என்று என்னவெல்லாமோ சொல்லி அசிங்கப்படுத்தப் பார்ப்பார்கள்.
ஓவியாவுக்காக போராட ரசிகர் ஆர்மி ரெடியாக இருக்கிறது. ஒரு தென்னிந்திய நடிகை இப்படி தைரியமாக பேசுவதை முதல்முறையாக பார்க்கிறோம்.
அடிச்சு தூக்குங்க ஓவியா. நாங்க இருக்கோம். ஜனநாயகத்திற்கு ஆதரவாக தைரியமாக குரல் கொடுத்த ஓவியாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர்.