சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், புதுச்சேரியில் காலமானார். அவருக்கு வயது 99. உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று மாலை கருவெடிக்குப்பம் இடுகாட்டில் இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும் என்றும் அரசு மரியாதையுடன் கி.ரா. அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.